வைதேகி காத்திருந்தாள்
எண்பதுகளில் வசூலை அள்ளிக்கொட்டிய படம். எனது பாட்டிக்கு பிடித்த பாடல் - ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சம் - பட்டி தொட்டியெல்லாம் ஒலிபரப்பப்பட்ட பாடல். இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தம் , காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி - என பல சூப்பர் ஹிட் பாடல்கள் நிறைந்த படம்.
இயக்குனர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளி வந்த இந்தப்படத்தில் விஜயகாந்த், ரேவதி, கோகிலா, ராதா ரவி, ராகவேந்தர் ஆகியோர் நடித்து இருந்தனர். ரேவதி மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது வெளி வந்த படம். ஓகோ என்கிற அழகு இல்லை. சிரிக்கும் போது வெகுளிச்சிரிப்பு. குட்டை வேறு. ஆனால் இவர் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தது தான் ஆச்சர்யமே. நடிப்பை மட்டுமே மூலதனமாக வைத்து நடிப்பு உலகிற்கு வந்தவர் ரேவதி.நடனம் தெரிந்து இருந்தாலும் இவர் நடித்த படங்களில் இவர் நடிப்பு மட்டுமே பேசப்பட்டது. எம் ஜி ர் அவர்களின் ஆசியுடன் சினிமா உலகத்தில் இவர் நுழைந்தது தமிழ் படங்களுக்கு ஒரு நல்ல நடிகையை கொடுத்தது.
விஜயகாந்த் நடித்த படங்களில் இது ஒரு மைல் கல். வெள்ளைச்சாமி கதாபாத்திரத்தில் வெளுத்துக் கட்டி இருந்தார். முறைப்பெண்ணிடம் விளையாட்டாக ஏதோ சொல்லப்போய் அவர் தற்கொலை செய்துகொள்வது நெஞ்சை உருக்கும் சோகம் . முறைப்பெண்ணாக நடித்தது கன்னட நடிகை பிரமீளா ஜோஷுவா. இவர் மகள் மேகனா ராஜ் இப்போது கன்னட சினிமாவில் பிரபலம். இளம் வயதிலேயே விதவை ஆகும் வைதேஹி (ரேவதி) கணவனை ஒரு விபத்தில் பறிகொடுத்துவிட்டு சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறார். பெண்ணின் இந்த நிலையை காண சகியாமல் தந்தை ராகவேந்தர் (இவர் சமீபத்தில் தான் மறைந்தார்) குடிக்கு அடிமை ஆகிறார்.
ஊருக்கு புதிதாக வரும் ஒரு இளைஞன்மீது வைதேஹிக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. ஆனால் அவரோ வேறு ஒரு பெண்ணைக்காதலிக்கிறார். இந்த காதல் ஜோடியை வைதேஹியும் வெள்ளைச்சாமியும் எப்படி சேர்த்து வைக்கிறார்கள் என்பது தான் கதை. வைதேஹிக்கும் வெள்ளைச்சாமிக்கும் உள்ள உன்னதமான உறவை சுந்தர்ராஜன் அருமையாக வெளிப்படுத்தியிருந்தார். இருவருக்கும் இடையே உள்ள mutual respect அருமையாக சித்தரிக்கப்பட்டு இருந்தது படத்தின் பலம்.
வில்லனாக ராதா ரவி. நிறைய படங்களில் பார்த்தது தான். ஆனால் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து நிதர்சனமான உண்மை. பின்னாளில் துணை நடிகையாக வலம் வந்த கோகிலா இந்தப்படத்தில் முக்கியக்கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இவர் காங்கிரஸ் அபிமானியான வண்ணை ஸ்டெல்லாவின் மகள். சமர்த்தாக திருமணம் முடிந்து சிங்கப்பூரில் செட்டில் ஆகி விட்டார். எனக்கு படத்தில் மிகப்பிடித்து இருந்த விஷயம் அந்த கிராமம் தான்.
எந்த ஊரில் படம் பிடித்தார்களோ தெரியாது. ஆனால் கிராமிய மணம் படம் முழுக்க வீசியதற்கு இந்த லொகேஷனும் ஒரு காரணம் என்று சொல்லலாம். கிராமத்து வீடுகளைப்பார்க்கும் போதெல்லாம் ஒரு வித ஆதங்கம் ஏற்படும். நகரங்களில் புறாக்கூண்டு மாதிரி வீடுகளில் வாழும் நமக்கு இந்த மாதிரி ஏக்கம் தோன்றுவது சகஜம் தான். நேரம் இருக்கும் போது மீண்டும் படத்தைப் பாருங்கள்.
கடந்த பாதையை வலம் வருவதில் உள்ள சுகமே தனி தான்.

Comments
Post a Comment