அந்த ஏழு நாட்கள்
அந்த ஏழு நாட்கள் பாக்யராஜின் படங்களிலேயே "அந்த ஏழு நாட்கள்" சிறப்பு அந்தஸ்த்தைப்பெற்ற படம். இந்தப் படம் 1983 வருடம் வெளி வந்தாலும் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. பாக்யராஜ், ஹாஜா ஷெரிப், அம்பிகா, கல்லாப்பெட்டி சிங்காரம், ராஜேஷ் ஆகியோர் இந்தப்படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள்.
தாலி சென்டிமென்டை தமிழகத்தில் ப்ராபல்யம் செய்ததில் பாக்யராஜுக்கு பெரும் பங்கு உண்டு எனலாம். இன்றைக்கு தாலியின் மகத்துவம் செல்லரித்து போய் விட்டது. வேறு கழுத்துடன் அலையும் தமிழ் பெண்களின் எண்ணிக்கை தான் இன்று அதிகம். கேரளாவில் இருந்து சென்னைக்கு வரும் ஒரு ஏழை இளைஞன் சினிமாவில் இசை அமைப்பாளர் ஆகலாம் என்கிற கனவுடன் வாழ்கிறான்.
மயிலாப்பூரில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் அவனுக்கும் அவன் கூட வந்த பையனுக்கும் தங்க இடம் கிடைக்கிறது. அந்த வீட்டின் உரிமையாளர் கல்லாப்பெட்டி சிங்காரத்தின் பேத்தி அம்பிகா இந்த அப்பாவி இளைஞனை சீண்டி மகிழ்கிறாள். விரைவில் இருவருக்கும் காதல் மலர்கிறது. விஷயம் விபரீதம் ஆகி விட இருவரும் வீட்டை விட்டு ஓடி காதல் மணம் புரிய விழைகிறார்கள்.
ஆனால் அம்பிகாவின் வீட்டார் ஆளை வைத்து பாக்யராஜை மொத்தோ மொத்து என்று மொத்துகிறார்கள். கல்யாணம் நடை பெறவில்லை. அம்பிகாவுக்கு வீட்டார் அவசரம் அவசரம் ஆக ராஜேஷுக்கு ரெண்டாம் தரமாக கல்யாணம் பண்ணி வைத்து விடுகிறார்கள். முதலிரவின் போதே அம்பிகா விஷம் குடிக்க கணவன் ராஜேஷ் அவரைக்காப்பாற்றுகிறார். ராஜேஷ் ஒரு டாக்டர் என்பதால் விஷயம் காதும் காதும் வைத்த மாதிரி முடிந்து விடுகிறது. பின்னர் அம்பிகாவிடம் ராஜேஷ் மென்மையாக காரணத்தை விசாரித்து அவருக்கு ஆறுதல் சொல்கிறார்.
தன்னை ஒரு சினிமா தயாரிப்பாளர் என்று சொல்லி கொண்டு பாக்யராஜை வரவழைக்கிறார். ராஜேஷின் அம்மாவுக்கு முடியாத நிலை - மரணப்படுக்கையில் இருக்கிறார். அவருக்காகத்தான் ராஜேஷ் அவசரக்கல்யாணம் பண்ணிக்கொண்டதே. கூடிய விரைவில் பாக்யராஜுக்கு விஷயம் தெரிந்து விட, இன்னொரு பூகம்பம் வெடிக்கிறது. அந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி இன்னமும் கண்ணில் நிற்கிறது. இந்த காட்சி தான் படத்தின் வசூலுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது எனலாம். அப்பாவி இளைஞனாக பாக்யராஜ் களை கட்டுகிறார்.
பாடல்கள் அருமை. அதுவும் - கவிதை அரங்கேறும் நேரம் - பாடலைக்குறிப்பிட்டு சொல்லலாம். ஹாஜா ஷெரிப் காமெடியில் கலக்குகிறார். முத்தம் தந்தால் தான் கீழே போவேன் என்று அடம் பிடிக்கும் கட்சியில் அம்பிகா காதலில் விழுந்த ஒரு பெண்ணின் மன நிலையை நன்கு பிரதிபலிக்கிறார். அமெரிக்கையான நடிப்பு வெளிப்படுகிறது ராஜேஷிடம் இருந்து. கொடுத்த வேடத்தை பாங்காக செய்து விடுகிறார் மனுஷன். மயிலாப்பூரிலும் கே கே நகரிலும் ஷூட்டிங். சுந்தர சென்னையின் அழகே தனி தான். பாக்யராஜும் அம்பிகாவும் பின்னர் சேர்ந்து நடிக்கவே இல்லை. ஏன்? திரைக்கதை அமைப்பதில் பாக்யராஜுக்கு நிகர் அவரே.
காலத்தால் மறக்க முடியாத ஒரு காவியம் "அந்த ஏழு நாட்கள்" .
மீண்டும் ஒரு முறை பாருங்களேன்!

Comments
Post a Comment