பாலக்காடு அண்ட் லீன்
பாலக்காடு என்கிற ஊர் பிரபலம் ஆவதற்கு சிவாஜி கணேசனும் காரணம் எனலாம்.
"பாலக்காடு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா அவன் குழந்தையைப் போல் ஒரு அம்மாஞ்சி ராஜா" என்கிற பாடல் வியட்நாம் வீடு என்கிற படத்தில் இடம் பெற்று பட்டி தொட்டியெல்லாம் பாப்புலர் ஆனது உங்களுக்கு நினைவு இருக்கலாம்.
பல வருடங்களுக்குப்பிறகு "மைகேல் மதன காமராஜன்" என்கிற படத்தில் கமல ஹாசன் பாலக்காடு பாஷையில் வெளுத்துக்கட்டினார். வாரினார் என்று யோசித்தவர்களும் உண்டு.
நான் வளர்ந்த ஊரில் பாலக்காடு மனிதர்கள் நிறைய பேர். நாங்கள் இருந்த/ இருக்கிற அடுக்கு மாடி குடியிருப்பில் நிறைய பேர் பாலக்காட்டு மனிதர்கள் தான். தி inscrutable americans என்கிற மாதிரி தி inscrutable palakkad iyers என்று கூட கூறலாம். இவர்கள் அவ்வளவு சுலபத்தில் பழகி விட மாட்டார்கள். பழகினால் உயிருக்கு உயிர் ஆக பழகுவார்கள்.
௧. எம் பி ஏ பட்டதாரிகள் படிக்கும் ஒரு பாடம் - POM . இதற்கு PRODUCTION OPERATION MANAGEMENT என்பது தான் விரிவாக்கம். சுவாரஸ்யமான சப்ஜெக்ட் தான். ஆனால் மாணவர்கள் திணறுவார்கள். நிறைய NUMERICALS உண்டு சிலபஸில். டிமாண்ட் போர்க்காஸ்ட்டிங், லைன் பாலன்ஸிங், எக்கோனிமிக் ஆர்டர் குவான்டிட்டி, லொகேஷன் செலெக்ஷன், சென்டர் ஆப் க்ராவிட்டி மெத்தெட், ஏபிசி அனாலிசிஸ், மல்டி பாக்டர் ப்ராடக்ட்டிவிட்டி, கண்ட்ரோல் சார்ட்ஸ், ஸ்டாண்டர்ட் டைம் என்று வித விதமான கணக்குகள். இதில் பல வருடங்களாகக்கற்பிக்கப்பட்டு வரும் பாடம் - லீன் மனுபாக்ட்டரிங். (LEAN MANUFACTURING).
பி. ஜப்பானில் உள்ள டொயோட்டா கம்பெனியில் முதன் முதலாக செயல்படுத்தப்பட்டது தான் இந்த லீன்.
சி. லீன் என்றால் எவ்வாறு வேஸ்ட்டை கம்மி பண்ணுவது என்பது தான். தேவை இல்லாததை தவிர்ப்பது எப்படி என்பது தான் லீன் மனுபாக்ட்டரிங்கின் தத்துவம்.
ட. லீன் தத்துவத்தைத் தழுவினால் கம்பெனி முன்னேற்றம் அடையும், லாபங்கள் கூடும், தொழிலாளிகள் சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள், அனாவசியமான செலவுகள் கட்டுப்படும் என்று ஒரு பெரிய சொற்பொழிவே நடத்தலாம்.
ஜப்பானில் இந்த தத்துவம் வெற்றி அடைந்த அளவுக்கு இந்தியாவில் வெற்றி அடையவில்லை தான். எப்படிடா சாக்கு போக்கு சொல்லி அடுத்தவன் தலையில் வேலையைக்கட்டலாம் என்று அலையும் இந்திய வர்க்கத்துக்கு லீன் எல்லாம் தேவை இல்லாத உபத்திரவம்.
இந்தியத் தொழிலாளிகளோ ஒரு படி மேல். எதற்கு எடுத்தாலும் "இதை நான் ஏன் பண்ணனும்" என்று கேள்வி கேட்டுக்கொண்டு வெட்டி பொழுது போக்குவதில் வல்லுநர்கள். என் கூடவே வேலை பார்க்கும் சக ஊழியர் - சதா சர்வகாலமும் மூக்கைச்சிந்தி பிலாக்கணம் பாடும் "துக்கி ஆத்ம" ரகம். எந்த வேலையைச்சொன்னாலும் - " எனக்கு இதற்கு சம்பளம் கிடைக்கிறதா"என்று எதிர்க்கேள்வி கேட்டு ஒரு முகாரி ராகம் பாடுவார். (A kind of toxic attitude towards work)
இத்தனைக்கும் அவருக்கு "ஆராய்ச்சித்தலைவர்" மற்றும் ஆராய்ச்சித் திலகம் என்கிற பட்டம் வேறு. ஆராய்ச்சியில் நன்கு தேர்ச்சி பெற்ற டாக்டரேட் பட்டம் பெற்றவர் என்றாலும் மனம் இருந்தால் தான் வேலை செய்வார். ஆனால் ஒன்று - மற்றவர்களுக்கு வேலையை delegate செய்வதில் அசகாய சூரன். இந்த மாதிரி ஊழியர்கள் இருந்தால் இந்தியாவில் லீன் உருப்பட்ட மாதிரி தான்.
நமது தமிழ் சமுதாயத்திலே பாலக்காடு பிராமணர்கள் வித்யாசனமார்கள். சாம்பார், கூட்டு, அவியல், உருளை காரக்கறி, கிச்சடி, பச்சடி, பருப்பு வடை, மோர் குழம்பு, பருப்பு உசிலி, மிளகு ரசம், அப்பளம் என்று நம் வீட்டில் மெனு நீளம் ஆக போய்க்கொண்டு இருக்க, இவர்கள் " ஒரு மிளகூட்டானும் பப்படமும்" பொரித்து வைத்து தேமே என்று சுவாமி காரியங்களில் ஈடுபாடு கொள்வார்கள்.
சமையல் அறையில் எண்ணி ஐந்தே பாத்திரங்கள் தான். " ஐயோஹ், எதற்கு வேலைக்காரியெல்லாம் ? சுத்த வேஸ்டு" என்பார்கள். இவர்கள் வீடுகளில் முத்து உருளும். சுத்தம் சோறு போடும் என்று தீவிரமாக நம்புவார்கள். நாராயணீயம் படிப்பார்கள். பகவத் சேவைக்கு போவார்கள். தீவிர கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால் சாப்பாடு விஷயத்தில் கறார்.
ஜப்பானியர்களின் லீன் தத்துவத்தை வீட்டில் (அதுவும் சமையல் அறையில்) கடைப்பிடிப்பதில் பாலக்காடு பிராமணர்களுக்கு நிகர் அவர்களே. எங்கள் வீட்டுக்குக் கீழே இருந்த ஒரு பையன் கூறுவான் " சாம்பார் பண்ணினால் கறி எதற்கு? சாம்பாரில் உள்ள தானைத்தொட்டுக்கொள்ளலாமே " என்பான். இவர்கள் (பாலக்காடு பிராமணர்கள்) நிறையப் படிப்பார்கள்.
சமையல் அறையில் மிகுந்த குறைவான நேரமே செலவிடுவார்கள். காப்பி குடிப்பார்களா இல்லை வேறு ஏதாவது பானம் அருந்துவார்களா என்று தெரியாது. வீட்டில் அரிசி மா இடித்தால் ஓடோடி வருவார்கள் - "வீடு பொட்டிச்சு போகும் ஆக்கும். மாவெல்லாம் இடிக்க வேண்டாம்" என்று அதிகாரம் செய்வார்கள். ஏப்ரல் மாதம் என்றால் வத்தல் வடாம் இடுவதில் மாமிகள் பிஸி என்றால் மாமாக்களோ பெண்டாட்டிக்கு சப்போர்ட் என்றால் அப்படி ஒரு சப்போர்ட்.
எதிலும் எப்போதும் சிக்கனம் என்பதே பாலக்காடு பிராமணர்களின் அடையாளம். இவர்கள் வீட்டில் உறவுக்காரர்கள் வந்து குமிவதும் கும்மி அடிப்பதும் என்பதும் அறவே கிடையாது. பெண் திருமணமாகி விட்டால் ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை என்று தான் தாய் வீட்டை எட்டிப் பார்ப்பாள். சில பெண்கள் மாதிரி சமைக்க சோம்பல் பட்டுக்கொண்டு பிறந்த அகத்தில் நாட்கணக்கில் செட்டில் ஆக மாட்டார்கள், எனது அருமை மருமான் கௌசிக் பத்ரா பாலக்காடு பாஷையில் வெளுத்துக்கட்டும் போது நாள் முழுக்க கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கும்.
கோவிலில் உண்டியல் கூடப்பார்த்துப் போடும் பாலக்காடு பிராமணர்களை லீன் தத்துவத்தின் ப்ராண்ட் ambassadors என்று சொன்னால் தப்பே இல்லை. சரி தானே?

Comments
Post a Comment