ஒரு கல்யாணம் - பாடங்கள் பல!
சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்காகப் பாலக்காடு செல்ல நேரிட்டது.
ரொம்ப நெருங்கிய சொந்தம். பாலக்காடு பக்கத்தில் நூரணி என்கிற சிறிய ஊர். கல்யாண மண்டபம் அக்ராஹாரத்தின் நுழை வாயிலில் இருந்தது.
இரவு பத்தரை மணிக்கு பேருந்து - பெங்களூரில் இருந்து. படுத்தவுடன் தூக்கம் அவ்வளவாக வரவில்லை. ஆனாலும் விடிகாலை ஐந்து மணிக்கெல்லாம் சந்திரா நகர் என்கிற இடம் வந்து விட்டது. அங்கிருந்து ஆட்டோ பிடித்தோம். ஒரே கட்டணம் தான் .. பேரம் எல்லாம் கிடையாது. பத்து நிமிட பிரயாணத்துக்கு நூற்றி ஐம்பது ரூபாய்.
மண்டபத்தில் இறங்கினதுமே ஒருவர் காபி காபி என்று கூவிக்கொண்டே வந்தார். சற்றே இளைப்பாறியதும் பல் துலக்கி காபி குடித்துவிட்டு குளிக்கப்போனோம்.
ரொம்பவே சிம்பிள் ஆக, ஆடம்பரம் எதுவும் இல்லாமல் நிறைவாக நடந்தேறியது திருமணம். சில பல குறைகள் நிச்சயம் இருந்தன. ஆனால் அனைவரும் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டார்களே ஒழிய, சபையில் சண்டை போட்டு, கலவரம் பண்ணி, அதிகாரத்தை பறைசாற்றி, குழப்பத்தை உண்டு பண்ணவில்லை.
சொல்லப்போனால் மதிய சாப்பாடு போது ஐஸ் கிரீம் மற்றும் குலாப் ஜாமுன் இருந்தது என்றே தெரியாது. பெங்களூர் திரும்பிய பின்னர் தான் விஷயமே தெரியும்.
காலம் எவ்வளவு மாறிபோச்சு என்கிற எண்ணமே மேலோங்கியது.
பிள்ளையின் பெற்றோரும் சரி பெண்ணின் பெற்றோரும் சரி தங்களது குழந்தைகள் முகத்தில் சிரிப்பு இருக்க வேண்டும் என்றே குறியாக இருந்தது பாராட்டப்படவேண்டியது.
உறவுக்காரர்கள் முக்கியம் தான். அவர்களுக்கு தகுந்த மரியாதை குடுக்கலாம் தான். ஆனால் மரியாதையை கேட்டு வாங்க முடியுமா? அது கிடைக்கவில்லை என்று குதியோ குதியென்று குதித்து எனக்கு தான் வாய் இருக்கிறது என்று மற்றவர்களின் வீட்டு விசேஷங்களில் மூக்கை நுழைத்து களேபரம் பண்ணுவதில் எந்த நியாயமும் இல்லை தான்.
பிள்ளையின் இரண்டு சித்தப்பாக்களும் தங்கக்கம்பிகள் எனலாம். இருக்கிற இடமே தெரியவில்லை.
பிள்ளையின் பெற்றோர் சுறு சுறுவென்று திருமண ஹாலில் ஓடியது இன்னமும் கண் முன் நிற்கிறது. பட்சண விநியோகம் ஆகட்டும், தாம்பூலப்பை கொடுப்பதில் ஆகட்டும் - எல்லா வற்றிலும் அப்படியொரு நேர்த்தி.
பெற்றோர் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்கிற பெரிய பாடம் கற்றுக்கொள்ள நேர்ந்தது.
குறைகளை பெரிது படுத்தாமல் நிறைகளை மட்டும் நினைத்து பார்த்தால் எல்லாமே நேர்மறையாகத்தான் தெரியும். பிள்ளையின் பெற்றோரை கரம் கூப்பி தலை வணங்குகிறேன்! பிள்ளையின் சந்தோசத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து திருமணத்தை நல்ல விதமாக நடத்தியதற்கு அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பெண் வீட்டுக்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

Comments
Post a Comment