புத்துணர்ச்சி தரும் புதம்மன்
குலதெய்வத் கோவில்களுக்கு சென்று வந்த பின்னர் அதன் தாக்கம் ரொம்ப நாள் இருக்கும் என்பது சத்யமான உண்மை. இஷ்ட தெய்வங்களின் கோவில்களுக்குச் சென்று வந்த பின்னரும் அதே மாதிரி உணர்வுகள் தான் நம்மிடம் இருக்கும். நிறையக் குடும்பங்களில் இதற்கு சரியான முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது தான் உண்மை. இக்கோவில்களுக்கு சென்று விட்டு வரும் போது சிரமம் இருந்தாலும் அவற்றை மிகை படுத்தக் கூடாது. களக்காடு புதம்மன் கோவில் சென்று விட்டு வந்த பிறகும் அதே மாதிரி ஒரு மன அமைதி கிட்டியது எங்களுக்கு.
திருநெல்வேலியிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது களக்காடு என்கிற சிறிய குக்கிராமம். பசுமை நிறைந்த பூஞ்சோலை என்று கூட களக்காடு ஊரைக் குறிப்பிடலாம். பக்கத்தில் உள்ள வள்ளியூர் மாதிரி களக்காடு இன்னமும் முன்னேற்றம் அடையவில்லை என்றாலும் களக்காடு ஊருக்குத் தனி அழகு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. களக்காடு ஊரில் உள்ள கோவில்கள் பின் வருமாறு சத்யவாகீஸ்வரர் சமேத கோமதி அம்மன் கோவில் உள்ளது. இதை பெரிய கோவில் என்று மக்கள் பாசத்துடன் அழைக்கிறார்கள். பின்னர் பெரிய தெருவின் முகப்பில் மற்றுமொரு பிள்ளையார் கோவில் உள்ளது. பஸ் நிலையம் அருகில் நினைத்ததை முடிக்கும் பிள்ளையார் கோவில் உள்ளது.
பெரிய கோவிலில் இருந்து பத்து நிமிடங்கள் நடையில் உள்ளது புதம்மன் கோவில். நாங்கள் கார் மூலமாக சென்றதில் அனாவசியமாகக் கோவிலைத் தேடி சுற்ற வேண்டி வந்தது. இதில் அதிர்ச்சி என்றால் நிறைய உள்ளூர்காரர்களுக்கு புதம்மன் கோவில் என்றால் தெரியவில்லை. பின்னர் உச்சாயினி மாகாளி அம்மன் தெரியுமா என்று கேட்டாலும் தெரியவில்லை. வெறுத்துப் போய் ஒரு வீட்டின் வாசலில் போய் நின்றேன். பின்னர் தான் புரிந்தது கோவில் உள்ள சரியான இடம். கிராமங்களில் விலாசம் கேட்கும் போது வடக்கே மேற்கே என்று சொல்வது புரிந்து கொள்வது கஷ்டமாகத் தான் இருந்தது. ஆனால் கோவில் முகப்பை அடைந்ததும் சொல்ல முடியாத ஒரு நிம்மதியை உணர முடிந்தது. ரம்யமான வயக்காட்டு பக்கத்தில் அமைந்துள்ளது புத்தம்மன் கோவில். சுற்றுபுறச்சூழல் மனதைக் கொள்ளை கொண்டது.
எக்கச்சக்கமான வாழைத்தோட்டம். கிராமம் முன்னேறி விட்டது என்பதை உணர வைக்கும் விதமாக ஹோண்டா ஸ்கூட்டரைப்பார்க்க முடிந்தது. புதம்மனைப் பற்றி நிறைய கதைகள் உண்டு. வரலாறு சரியாகத்தெரியவில்லை. ஆனால் துர்க்கை அம்மன் என்று மட்டும் நன்றாக புரிந்தது. பெரிய கோவிலுக்கு பின்னர் கட்டியதனால் புது அம்மன் என்று அழைக்கப்பட்டு பின்னர் பெயர் புதம்மன் என்று ஆகி விட்டது என்று கேள்வி பட்டோம். கோவிலின் வரலாறு பற்றி யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்.
சிறிய கோவில் தான் ஆனால் சூழ்நிலை அப்படியொரு ரம்யமாக மங்களமாக இருந்தது. தாயாரைப் பார்க்க பார்க்க மனதில் பரவசம் உண்டாகிறது. அம்மன் இருக்கிறாள் நம்மைக் காக்கிறதுக்கு என்று மனது அமைதி அடைகிறது. ஒரு பம்ப்செட் குழாய் இருக்கிறது - அதில் கால் அலம்பிக்கொள்ளலாம். ஆனால் கழிப்பறையை எதிர்பார்க்க முடியாது. தொலைதூரம் பயணம் செய்து விட்டு வந்தால் இது ஒரு பிரச்னை தான். அதுவும் நீரிழிவு இருப்பர்களுக்கு சற்று சிரமம் தான். பளிங்கு மாளிகைகளில் இல்லாத அழகு இம்மாதிரிக் கிராம கோவில்களில் உள்ளது. அம்மனுக்கு நடுவில் ஸ்ரீ சக்ரம். மணிகண்டன் மாமா தான் கோவிலில் அபிஷேகம் பண்ணுவதற்கான ஏற்பாடுகளை பண்ணியிருந்தார்.
மாமா ரொம்ப சாத்வீகம். சொன்ன வேலையை கனகச்சிதமாக முடிப்பதில் கில்லாடி என்று புரிகிறது. மாமாவுக்கு ஒரு பையன் ஒரு பெண். பையன் பத்தாங்கிளாஸ் பரீக்ஷை எழுதி இருக்கிறான் என்று சொன்னார். மாமா கையினால் அம்மனுக்கு அப்படியொரு அலங்காரம். காண கண் கோடி வேண்டும். அம்மன் எங்களைப் பார்த்து புன்னகைப்பது போல் ஒரு பிரமை. ஆனால் மணிகண்டன் மாமாவின் கை வண்ணத்தில் அப்படியொரு அலங்காரம். நாங்கள் எடுத்து சென்று இருந்த புடவை மற்றும் ரவிக்கைத் துணியை அற்புதமாக புதம்மனுக்கு சாத்தி இருந்தார்.
அம்மனின் அபிஷேகம் கண் கொள்ளா காட்சி. மற்ற கோவில்கள் மாதிரி நச்சரிப்பு கிடையாது. அப்படியொரு அமைதி. தேவி ஸ்தோத்ரத்தை மனம் முணுமுணுக்கிறது. "மகேஸ்வரி உன்னை நான் மனமுடன் மொழிகளால் மெய்யுடன் மலர்களால் சிந்தித்து துதி செய்து வணங்கியே பூஜிக்க வரம் எனக்கு அருள்வாய் வழி வேறு இல்லை அம்பா , வல் வினைகள் விலகவே அம்பிகே சுந்தரி ஆனந்த வடிவமே அம்புலி அணிபவர் முகமரைப்பானுவே பாபம் இருளினைப் போக்கிடும் ஜோதியே..." மணிகண்டன் மாமா மகிஷாசுர மர்தினி ஸ்லோகத்தைப் போடுகிறார். கேட்க கேட்க காதுக்குத் தெவிட்டாத இன்பம். மின் விசிறி இல்லை, மாமாவுக்கு நன்கு வியர்த்து விட்டது. ஆனாலும் முகத்தில் மாறாத புன்னகை.
அம்பிகையின் மேல் அவ்வளவு பக்தி. மனம் அம்மனை நினைத்து வேண்டுகோள் வைக்கிறது. "என்னைக் காப்பாற்றுத் தாயே" என்று இறைஞ்சுகிறது. கிராமத்து மக்கள் ஏன் இந்தக் கோவிலை உதாசீனம் செய்கிறார்கள் என்று கோபம் கூட வருகிறது. ஆனால் நாம் என்ன சொல்ல முடியும். அவரவர் கஷ்டம் அவரவருக்கு. ஆனாலும் உள்ளோர் கோவிலுக்கு வாரம் ஒரு முறையாவது வரக்கூடாதா என்ன? இதில் என்னவொரு சிறப்பு என்னவென்றால் - அந்த கோவிலில் அமரும் போது, நம் மூதாதையர் இங்கே தான் அமர்ந்திருப்பார்கள் என்ற உணர்வு மனதை மகிழ்ச்சி அடையச்செய்கிறது.
எனது பாட்டி - திருமதி வள்ளி அம்மாள் - எப்பொழுது நினைத்தாலும் பிரசாதம் பண்ணி புதம்மன் கோவிலுக்கு வந்து விடுவாராம். அதனால் சிறிய வயது முதலே நான் புதம்மனைப் பற்றி அறிந்திருந்தேன். பேரன்கள் பேத்திகள் மத்தியில் எனது பாட்டிக்கு " களக்காடு அம்மை " என்கிற பெயர் தான் நிலைத்து இருந்தது. களக்காடு அம்மை மனோ தைர்யம் மிக்கவர். புதம்மன் மேல் அவ்வளவு பக்தி வைத்து இருந்தார், இந்த ஒரு காரணத்தினால் தான் எனக்கு புதம்மன் மேல் அவ்வளவு ப்ரீத்தி உண்டாகி விட்டது எனலாம்.
அபிஷேக ஆராதனைகள் முடிந்து கோவிலை வலம் வருகிறோம். நாகர்களைப்பார்க்க முடிகிறது. வேப்ப மரம் மற்றும் அதன் காற்றும் நிழலும் சொல்ல வேண்டுமா? 20 - 30 வருடங்கள் முன்னர் புதம்மன் கோவில் பக்கத்தில் ஆறு ஓடுமாம். இப்பொழுது அதன் சுவடே இல்லை. களக்காடு ஆற்றில் குளித்த நினைவு இருக்கிறது. ஆனால் இது 1978 இல். மணலைச்சுரண்டி எடுத்து கிராமத்தை பாழ் பண்ணும் வக்கர புத்திக்காரர்கள் களக்காடு ஊரையும் விட்டு வைக்கவில்லை போல. விடைபெறும் போது மனம் கனக்கிறது. மணிகண்டன் மாமாவிடம் எங்கள் விலாசத்தைக் கொடுக்கிறோம். அடுத்த முறையும் வருவதற்கு புதம்மன் தான் அருள் புரிய வேண்டும். புதம்மன் கருணை, புதம்மனே துணை.
Comments
Post a Comment