அப்பா அம்மா & அமெரிக்கா

 


சமீபத்தில் கே. பாலச்சந்தரின் "அவர்கள்" (1977 ) பார்த்தேன். ப்ராஹ்மண துவேஷி மாதிரி அவர் நடந்து கொண்டாலும், 1977 வருடத்திலியே முற்போக்கான சிந்தனைகளை சினிமாவில் காட்டியதற்கு அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். சிறிய வயதில் இந்த படத்தைப் பார்த்திருந்தாலும் மறுபடியும் ஒரு முறை பார்க்கும் போது நினைவுகள் மலர்ந்தன. இப்படத்தில் கன்னட நடிகை லீலாவதியின் நடிப்பைப் பார்த்து அசந்து விட்டேன்... அனுவாக நடித்து இருந்த சுஜாதாவுக்கு ஆயாவாகவும் மாமியாராகவும் நடித்து தனது நடிப்பின் மூலம் கண்களில் நீரை வரவைத்து விட்டார். அதுவும் அந்த கடைசிக் காட்சி... கண் முன்னே நிற்கிறது. பிள்ளையை எதிர்த்து மருமகளுக்கு துணையாக இருந்து விட முடிவு செய்யும் இடத்தில் நிமிர்ந்து நிற்க வைக்கிறது லீலாவதியின் அபார நடிப்பு. பாலக்காடுத் தமிழ் பாஷையில் கலகலக்கவும் கண் கலங்கவும் வைக்கிறார் கமல். அந்த பழைய கமல் மாதிரி நடிகரை இனிமேல் எங்கே பார்ப்பது?

Digressions apart , இந்த மாதிரி மாமியாரை பார்க்க முடியுமா - இப்போதுள்ள இன்டர்நெட் யுகத்தில். தொலைக்காட்சித் தொடரே தவமாக கிடக்கும் மாமியார்கள் தான் இப்பொழுது ஜாஸ்த்தி. சிவாஜி பாடின - " நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம் " என்பது பாட்டோடு சரி. நடை முறை வாழ்வில் இதற்கு அர்த்தமில்லாமல் போய் விட்டது தான் வருத்தமே.

நான் தங்கியிருக்கும் பல மாடி குடிஇருப்பு பகுதியில் எங்கள் வீட்டுக்கு எதிரே ஒரு குடும்பம். பார்க்க பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ரிட்டையர் ஆன தாத்தா , பாட்டி மற்றும் தாத்தாவின் அம்மா - குச்சியால் ஊனிக்கொண்டு நடக்கும் பாட்டி. இவர்களின் மகன் பக்கத்துக் குடியிருப்பில் மனைவி மற்றும் மகளுடன் தங்கி உள்ளான். பேத்தி படு சுட்டி. பேத்திக்கு தலை வாரி, டிரஸ் மாட்டி விட்டு அழகு பார்க்கும் பாட்டி. பேத்தியுடன் வாக் போகும் தாத்தா என்று காண்பதற்கே ரம்யமாக உள்ளது. பாட்டியும் தாத்தாவும் தொலைக்காட்சி பார்க்கிறார்கள். ஆனால் வீட்டு வேலையை எல்லாம் முடித்து விட்டு. தாத்தா ரிடைர்ட் வாழ்க்கையை enjoy பண்ணுகிறது தெரிகிறது. அவர்கள் வீட்டிலும் சின்ன சின்ன பிரச்னைகள் இருக்கலாம். எனக்கு தெரியாது. ஆனால் அவர்களது schedule பார்த்தால் மிக நன்றாக இருக்கிறது. நான் வெளியே கேட் வழியே போகும் போதோ இரு சக்கர வாகனத்தை ஓட்டும் போதோ அவர்கள் வீட்டின் ஹாலில் காஞ்சி மகா பெரியவா அவர்களின் உருவப்படத்தை பார்க்க நேரிடும். பாட்டி நைட்டி தான் போட்டு கொள்கிறார். ஆனால் இந்த வயதிலும் அப்படியொரு சுறுசுறுப்பு. படுக்கையை மடித்து வைப்பது, தலைகாணி உரையை மாற்றுவது. கீரை ஆய்வது, காய்கறி நறுக்குவது, காலை மணி பத்து ஆனால் பூஜை என்று ரொம்பவும் ஸிஸ்டெமடிக் ஆக இருக்கிறது அவர்கள் வாழ்க்கை.

நான் அவர்கள் வீட்டை வேய்வு பார்க்கிறேன் என்று தவறாக எண்ண வேண்டாம். ஏதோ தற்செயலாக பார்வை அங்கே செல்லும். செவ்வாய் வெள்ளி ஆனால் பாட்டி பூ வாங்க வண்டிக்காரனிடம் வருவார். அதே மாதிரி காய்கறியும் தான். துணி உணர்த்துவது, துணி மடிப்பது என்று எல்லாக் குடும்பங்களிலும் நடக்கிற தினசரி சமாச்சாரங்கள் தான் இங்கேயும். ஆனால் வீடு முத்து உருள்கிறது. சுற்றம் சோறு போடும் என்ற பழமொழிக்கேற்ப பாட்டி வீட்டை துப்புரவாக வைத்து இருக்கிறார். சனி ஞாயிறு ஆனால் செக்கச்செவேலென்று ஒரு பிள்ளையாண்டான் வந்து விடுகிறான் - பாட்டியின் பிள்ளை என்று சாயலைப் பார்த்து தெரிகிறது.

இதையெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால் - நிறையக்குடும்பங்களில் இம்மாதிரிக் காட்சிகள் காண்பது அரிதாகி விட்டது எனலாம். நீரிழிவு வியாதி ஒரு lifestyle டிசீஸ். சோம்பேறித்தனத்துக்கு மருந்தே கிடையாது. சுறுசுறுவென்று இருந்தால் இந்தநோயைக் கட்டுப்படுத்தலாம். அதை விட்டு விட்டு டீவீ முன்னால் உட்கார்ந்தால் சுகர் கூடத்தான் செய்யும். டீவீ பார்க்கலாம் தப்பில்லை. ஆனால் வீட்டை நாறடித்துவிட்டு டீவீ மேல் அப்படி என்ன மோகம்? நிறைய பெற்றோர்களுக்கு பேரன் பேத்திகளை பார்த்துக்கொள்வது அலுப்பாக இருக்கிறது. ஒத்துக்கொள்கிறேன்,. குழந்தைகளை மேய்ப்பது சாமான்யப் பட்ட கார்யம் அல்ல. அதற்கு உடம்பும் மனமும் ஒத்துழைக்க வேண்டும்.

ஒரு வேலையாளை வைத்துக் கொண்டு தாராளமாக பார்த்துக்கொள்ளலாம். ஆனால் அப்பா அம்மாக்கள் தியாக மனப்பான்மையோடு பேரனையும் பேத்தியையும் பார்த்துக்கொள்ள வேண்டும். மூக்கால் அழுதுக்கொண்டே பேரன் பேத்திகளை பராமரிப்பது நல்லது இல்லை. எங்கள் சொந்தத்தில் ஒரு குடும்பம். அவர்களுக்கு இரண்டு பெண்கள். இரண்டுமே அமெரிக்கா தான். இரண்டாமவள் சென்னைக்கு வந்து விட்டாள் - மாமனார் தவறினபிறகு - இப்போது மாமியார் பேரனைப் பார்த்துக் கொள்கிறார். மகன் வருடத்துக்கு ஒரு முறை அமெரிக்காவில் இருந்து வருகிறான். மூத்த பெண் சற்று சோம்பேறி. இரண்டு குழந்தை ஆகி விட்டது.

கணவனுக்கு அமெரிக்காவில் வேலை. இவளுக்கும் அங்கே வேலை கிடைத்து விட்டது. கணவனின் அப்பா அம்மா அமெரிக்கா வர வழைக்கப்பட்டார்கள் . ஆறே மாதத்தில் சென்னை திரும்பி விட்டனர். இந்தப் பெண்ணின் மாமியார், மருமகளை போலவே சோம்பேறி. எல்லா பாரமும் மாமனார் தலையில். மாமியார்காரி டீவீ பார்க்கும் சுக வாசி. மாமனார் திட்டவட்டமாக சொல்லி விட்டார் - " என்னால் அமெரிக்கா வர முடியாது. எனக்கும் முடியவில்லை". இப்போது அந்த பெண்ணின் அப்பா அம்மா போய் இருக்கிறார்கள். திரும்பி வர எட்டு மாதம் ஆகலாம். அமெரிக்கா என்றதுமே வாயைப் பிளக்கும் காலம் மலையேறி விட்டது,

அப்பா அம்மாக்களால் அமெரிக்காவில் ஜெயில் வாழ்க்கை வாழ முடியவில்லை. சலிப்பு தட்டி விடுகிறது. எப்போதுடா இந்தியா திரும்புவோம் என்று ஏக்கம் வந்து விடுகிறது. இந்த மாதிரி பிரச்னைகளுக்கு சுலபமாக தீர்வு கண்டுபிடிக்க இயலாது. வீட்டுக்கு வீடு வாசப்படி. ஸோ என்னதான் சொல்ல வருகிறாய் என்று கேட்கிறீர்கள்? ௧. பேரன் பேத்திகளை பார்த்துக்கொள்ள முடியாவிட்டால் பிள்ளைகளிடம் சொல்லி விடவும். தப்பே இல்லை. பின்னாளில் ஏதாவது வார்த்தை விபரீதம் ஆகி சண்டை சச்சரவு என்று வருவதற்கு முன்னால் சமயோசிதமாக செயல் படுதல் அவசியம். ௨. பேரன் பேத்திகளை பார்த்துக் கொள்ள முடியவில்லை என்று சொல்லி விட்டு, உடம்பைப் பார்த்துக்கொள்ளாமல் , டீவீ முன் உட்கார்ந்து வெட்டி பொழுதைப் போக்கி, எப்படா பிள்ளைகளிடம் அழுகைப்பாட்டு பாடலாம் என்று தயை செய்து அலைய வேண்டாம்.

இப்போதுள்ள காலக்கட்டத்தில் வேலை பார்க்கும் இடத்தில மன அழுத்தம் நிறைந்து இருக்கிறது. பிள்ளைகளிடம் ஓரளவு தங்களது சுமைகளையும் கவலைகளையும் சொல்லலாமே தவிர அவர்களை சௌண்டிங் போர்டு ஆக பாவித்து சதா சர்வகாலமும் புலம்பினால் பிள்ளைகளுக்கு வெறுத்து விடும். பெருந்தன்மையோடு நடப்பது என்பது கஷ்டம் தான் - ஆனால் this is not impossible . பேரன் பேத்திகளைப்பார்த்துக்கொள்வது என்பதே அருமையான உடற் பயிற்சி தான். மனசிலும் உற்சாகம் பிறக்கும். ஆனால் முடியவில்லை என்றால் குடி முழுகி விடாது. ஆனால் சுறுசுறுப்பாக இருத்தல் வேண்டும். நார்மல் வீடு வேலைகளை செய்து கொண்டு சராசரி வாழ்க்கை வாழ்வதில் தான் சாமர்த்தியம் அடங்கி இருக்கிறது. சீதாப்பாட்டியின் வார்த்தைகளில் - 

" a house where the kitchen is maintained well will become a home ".

 நிறைய குடும்பங்களில் பிரச்னையே இதில் தான் ஆரம்பம்.

Comments

My eBooks

 

     

Popular posts from this blog

Those wonderful terrace memories!

The father who became a star

அந்த ஏழு நாட்கள்