Can we meet for lunch?
சில வருடங்களுக்கு முன்பு என்னுடன் பள்ளிக்கூடத்தில் படித்த சக நண்பன் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டான். அவன் இப்போது வேலை பார்ப்பது ibm கம்பெனியில் - அமெரிக்காவில். வீட்டில் அனைவரும் பாம்பே சென்று இருந்ததால் என்னால் முடிந்த அளவுக்கு மாக்கி நூடுல்ஸ் மற்றும் தயிர் சாதம் தயார் செய்தேன். அவன் வருவதற்கு முன்பு ஜீவன் பீமா நகரில் இருந்த ஒரு உணவு விடுதியில் மஞ்சூரியன் ஆர்டர் செய்து போய் வாங்கி வந்தேன்.
சுவாரஸ்யமாக பேசினோம். பழைய நினைவுகளை அசை போட்டோம். மறக்க முடியாத பள்ளிக்கூட நாட்களை நினைத்த போது தொண்டையில் எதுவோ அடைத்த மாதிரி ஒரு பீலிங் வந்ததென்னவோ நிஜம்.
அவன் கிளம்பும் போது கீழ் வந்து அவனைக்காரில் ஏற்றி விட்டு வீடு திரும்பினேன். அவனுக்கோ சம்பளம் எக்கச்சக்கம் - நானோ கல்லூரி பேராசிரியர். ஏணி வைத்தாலும் எட்ட முடியாது தான். மிக இளம் வயதிலேயே கல்வித்துறையைத்தேர்ந்து எடுத்தது எனக்கு ஆழ் மனதில் வருத்தமே. கார்பொரேட் துறையில் வேலை பார்த்தவர்களுக்கு ஆசிரியர் தொழில் என்றால் கொஞ்சம் ஏமாற்றமே மிஞ்சும். இரண்டு தொழில்களையும் ஒப்பிடவே முடியாது. சம்பளம் ரொம்ப ரொம்ப சுமார் தான்- -கல்லூரிகளில்.
சில வருடங்களுக்கு பிறகு இதே பள்ளிக்கூடத்தோழன் தொலைபேசியில் அழைப்பு விடுத்தான். " WHERE CAN WE MEET FOR LUNCH?" ஓட்டல் லீலாவில் மதியம் ஒரு மணிக்கு சந்திக்கலாம் என்று முடிவானது.
அன்றைக்கு எனக்கு அனேகல் பக்கம் வேலை இருந்தது. ஜீவன் பீமா நகரில் இருந்து பேருந்து ஏறி சில்க் போர்டில் இறங்கி இன்னொரு பேருந்து பிடித்து அனேகல் போய் அங்கு வேலை முடிந்து ஓட்டல் லீலா வந்து சேர்வதற்குள் மணி 12.45 ஆகி விட்டது.
வரவேற்பறையில் உட்கார்ந்தேன். சிறிது நேரத்திலே இந்த நண்பன் வந்தான். எனக்கோ பயங்கர பசி. காலையில் இரண்டு இட்லி சாப்பிட்டதோடு சரி. நண்பன் என்னவென்றால் பேசிக்கொண்டே போகிறான். பின்னர் காபி குடிக்கலாமா என்று அரை மனதோடு கேட்கிறான். நாசுக்காக வேண்டாம் என்று மறுத்து விட்டு வெளியே வந்து பேருந்துக்காக காத்திருந்த போது மனது வலித்தது.
மனைவியை அலைபேசியில் தொடர்பு கொண்டு மோர் சாதம் வைத்திருக்கும் படி சொன்னேன். நான் வீட்டுக்குள் நுழைந்த போது என் மனைவியும் என் குழந்தைகளும் என்னைப்பார்த்த பார்வை...
லீலா ஓட்டலில் சாப்பாடு போட இந்த பள்ளிக்கூட நண்பனுக்கு மனசு வரவில்லை போலும். அப்படியென்றால் எதற்காக மதிய உணவிற்கு வா என்று கூப்பிட வேண்டும்? சீ என்று ஆகி விட்டது. எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை என்றுமே மேல் தான் .. ஆனால் ஒருவரை சாப்பிட வா என்று கூப்பிட்டுவிட்டு பட்னியோடு அனுப்பவது எந்த விதத்தில் நியாயம்? அதுவும் பள்ளிக்கூட நண்பனுக்கு. இது தான் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பண்பாடு போலும் !

Comments
Post a Comment