IdhayaKamalam - இதயக்கமலம்
மராத்தி மொழியில் 1964ல் வெளி வந்த படம் - பாட்லாக்; படம் ஒரு மராத்தி நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. ஜெயந்த் என்பவர் எழுதிய "ஆஷா பரத் ஏதே" என்ற கதையின் தழுவல் தான் படம். பிரபலமான வக்கீல் - வெளிநாட்டுக்கு செல்ல நேரிடுகிறது. கணவன் மனைவிக்குள் அப்படியொரு அன்யோன்யம். மனைவியைப் பிரிய மனமில்லாமல் வக்கீல் தொலை தூரப் பயணம் மேற் கொள்கிறார். ஒரு இரவு கதவு தட்டபட மனைவி திகைக்கிறாள் - வந்திருப்பது அவளது தங்கை - அவளை மாதிரியே இருக்கும் அவள் தங்கை. தங்கை நிலைமை படு மோசமாக இருக்கிறது. பல வருடங்களாகப் பிரிந்து இருந்தாலும், ரத்த பாசம் இவளைப்பதற வைக்கிறது. மருந்து வாங்க வெளியே போக வேண்டும். எப்படி போவது? இரு சகோதரிகளும் உடைகளை மாற்றிக்கொள்கிறார்கள். வக்கீலின் மனைவி டாக்டர் கிளினிக் போகும் வழியில் தங்கையின் கணவன் இவளைத் தன் மனைவி என்று எண்ணி கடத்திக்கொண்டு போய் விடுகிறான், தங்கை கொள்ளைக்காரக்கும்பலைச் சேர்ந்தவள். இங்கே வக்கீல் வீட்டில் ஒரே அமளி துமளி. மருமகள் இவ்வளவு சீரியஸ் என்று நம்ப முடியாமல் டாக்டர் வரவழைக்கப்படுகிறார். முயற்சி வீண். மனைவி இறக்க வக்கீல் கதறித்துடித்துக்கொண்டு வருகிறார். உண்மையான மனைவி ஜெயிலில் தள்ளப் பட அவள் வக்கீல் தான் தன் கணவன் என்று ஆணித்தரமாகக் கூற , ஒரே ரசாபாசம் ஆகி விடுகிறது. கணவனிடம் மனைவி கடைசியில் எப்படி ஒன்று சேர்கிறாள் என்பது மிச்சக்கதை. உங்களுக்குப் புரிந்து இருக்குமே ! அமோக வெற்றியைப் பெற்ற "இதயக்கமலம்" படம் இந்த மராத்தி படத்தைத் தழுவித்தான் எடுக்கப்பட்டது. படம் பியூஜி கலர். கே ஆர் விஜயாவின் மார்க்கெட் ஓங்கி இருந்த நேரம். "காதலிக்க நேரமில்லை" படப்புகழ் ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடித்த படம். ஹிந்தியில் "மேரா சாயா" என்று மகத்தான வெற்றியைப் பெற்ற படம். யு tube இல் தமிழ் படத்தைப் பார்த்த பொழுது - ஒரு வித ஏமாற்றமே மிஞ்சியது. ரவிச்சந்திரன் அழகாக இருக்கிறார். ஆனால் நடிப்பு என்னவோ சுமார் ரகம் தான். மனைவியை இழந்த கணவனின் pathos ஐ கொண்டு வர இயலவில்லை அவரால். ஹிந்தியில் சுனில் டத்தும் சுமார் நடிப்பு தான். கே ஆர் விஜயா - புன்னகை அரசி - ஓவர் ஆக்ட்டிங் - மெலோட்ராமாட்டிக் - இந்த காலத்துக்கு ஓத்தே வராது. அவர் அழும் பொழுது எரிச்சல் தான் வருகிறது. படத்துக்கு மிகப்பெரிய பலமே இசை தான். " உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல" " நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்" " மலர்கள் நனைந்தன பனியால் என் மனமும் ஒளிர்ந்தது நிலவாலே" அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ரகம். ஹிந்தியில் பிரபலமான - " ஜும்க்கா கிரா ரே " தமிழில் - " மேளத்தை மெல்லத் தட்டு மாமா" என்று தமிழாக்கம் செய்யப்பட்டு இருந்தது. கிளைமாக்ஸ் சற்றே சப் என்றிருந்தாலும் படம் ஒரு தடவை பார்க்கும் படி இருந்தது, இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் என்றாலும் படத்தில் உணர்ச்சிகளுக்கும் மகத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது சிறப்பு, ஒரு நாவலைத் திரையாக்கம் செய்யும் பொழுது அதை ஒரு வழி பண்ணி விடுவார்கள். சுஜாதா மூக்கால் அழுது இருக்கிறார். அவரது - "காயத்ரி". "பிரியா" "கரையெல்லாம் செண்பகப்பூ" "பிரிவோம் சந்திப்போம்" திரையாக்கம் செய்யப்பட்ட பொழுது கதையைக் கொலைப் பண்ணி விட்டார்களே என்று சுஜாதா அங்கலாய்த்து இருக்கிறார். "பாட்லாக்" அப்படி பண்ணவில்லை . மூலக்கதையின் சுவை சற்றும் குன்றாமல் அதைத் திரைக்குக் கொண்டு வந்தது மிகச்சிறந்த அம்சம். இப்பொழுது சினிமா என்ற பெயரில் வரும் குப்பைகளுக்கு மத்தியில் "இதயக்கமலம்" மாதிரி படங்கள் ஆர் அல்வய்ஸ் வெல்கம்!
Comments
Post a Comment