Sankaran Kovil
திருநெல்வேலி என்றதுமே எனக்கு நினைவுக்கு வருவது அல்வா மட்டுமல்ல - ஒரு பிரபல சினிமாப் பாடலும் தான். சிறு வயதில் நெல்லைக்கு ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போது வானொலியில் கேட்ட பாடல் - " அமுதைப் பொழியும் நிலவே - நீ அருகில் வராததேனோ?". திருநெல்வேலி அல்வாவுக்கு கெட்ட பெயரை வாங்கித்தந்த நற்பெருமை சத்தியராஜுக்கு சேரும் என்றாலும் நெல்லை ஊரின் அழகே தனி தான் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை. மண் வாசனை என்ன என்பது நம் சொந்த ஊருக்குப்போன பிறகு தான் தெரியும்.
1984 வருடம் நான் பார்த்த தாமிரபரணியையும் இப்பொழுதுள்ள நதியையும் பார்க்கையில் நெஞ்சில் சுரீர் என்கிறது. நவ கைலாசம் மற்றும் நவத்திருப்பதி தரிசினம் பண்ணின பிறகு சங்கரன் கோவில் போக வேண்டும் என்று ஒரு அவா இருந்தாலும் முடியுமா என்று தெரியவில்லை. 2012 வருடம் கோவிலுக்கு சென்று இருந்தாலும் சங்கரன் கோவிலின் மகிமை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அப்படியொரு புண்ய ஸ்தலம் அது. கண் நோய்களைத் தீர்க்க வல்லது. மனப்பிராந்தியையும் நீக்குவதில் சங்கரன் கோவிலுக்கு நிகர் சங்கரன் கோவில் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை. திருநெல்வேலி வட்டாரத்தில் வீட்டுக்கு வீடு ஒரு கோமதி உண்டு. கோமதி என்ற பெயரை கோமா என்று சுருக்கமாக அழைக்கும் பழக்கம் அனைவரும் அறிந்ததே. சங்கரன் மற்றும் சங்கர நாராயணன் என்கிற பெயர்களும் மிக பிரபல்யமானவை.
கோவில் சாயங்காலம் நான்கு மணிக்கே திறந்து விடுகிறது. ஜானகிராம் கொஞ்சம் காஸ்டலி விடுதி என்றாலும் உணவின் தரம் பிரமாதம். ஆனாலும் வரகரிசி பொங்கல் என்றெல்லாம் கூறி டிபன் வைத்தாலும் அது அரிசி உப்புமா மாதிரி டேஸ்ட் என்பதால் சப் என்று இருக்கிறது. ஆனால் இந்த அளவு நெல்லை ஊரில் சாப்பாட்டுக்கு விலை வைக்க வேண்டுமா என யோசிக்கவும் வைக்கிறது. இது மட்டும் தான் உறுத்தலே தவிர ஜானகிராம் விடுதியின் பணித்தராதரம் அல்லது சேவையின் தரம் (Service Quality) பற்றி குறை கூறுவதற்கு ஒன்றும் இல்லை. பணியாளர்கள் கனிவுடன் பழகுகிறார்கள். ரயில்வே நிலையம் ஜானகிராம் விடுதியில் இருந்து பத்து நிமிடத் தூரத்தில் இருப்பது மிகப்பெரிய சவுகரியம் எனலாம். நெல்லையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மணிக்கூர் பயணம் சங்கரன் கோவிலுக்கு. போகிற வழி ரம்யமாக இருக்கிறது. மே மாத வெய்யிலை பொருட்படுத்தாவிட்டால்..
அன்று எங்கள் அதிர்ஷ்டம் - சாயந்திரம் லேசாக மழைத் தூறிக்கொண்டிருந்தது. அப்பா எவ்வளவு பெரிய கோவில் என்று பிரமிக்க வைக்கிறது ! கோவில் முகப்பில் வரிசையாக கடைகள் - கொலு பொம்மைகளை மலிவான விலையில் வாங்க முடிந்தது. இரண்டு மூன்று உணவகங்களை பார்க்க முடிந்தது. அன்று கூட்டம் சாதாரணமாகத் தான் இருந்தது. ஆனால் என்னே ஒரு சக்தி - மனதிற்கு நிறைவைத் தரும் ஒரு ஆக்கபூரவமான சக்தியை உணர முடிகிறது - கோவிலுக்குள் நுழையும் போதே. தமிழ் நாட்டுக்கு கோவில்களின் அழகே தனி தான். ஒத்துக்கொள்கிறீர்களா? கோமதி அம்மனின் அழகை வர்ணிக்கவே முடியாது. " தாயே உன் காலடியே எனக்கு சொர்க்கம் " என்று மனது எண்ணிக்கொள்கிறது, சிவன் பெரியவரா பெருமாள் பெரியவரா என்று பக்தர்களுக்குள் தர்க்கம் நடந்தது. அப்பொழுது உமையவள் சிவனிடம் வேண்டுகோள் வைக்க சிவ பெருமான் - சங்கர நாராயணனாக தோற்றம் அளித்தாராம். வீட்டில் பாம்போ தேளோ இருந்தால் இந்தக் கோவிலில் வேண்டிக்கொள்ளலாம். வெள்ளியில் பண்ணின பூச்சிகளை காணிக்கையாக போடலாமாம் .... கண் பார்வைக் கோளாறுகளுக்கு சிறந்த நிவர்த்தி சங்கரன் கோவில் தான்.
கோவிலைச் சுற்றி வலம் வரும் பொழுது புற்று மண்ணை எடுக்கும் பாக்கியம் கிடைத்தது. இந்தப் புற்று மண்ணுக்கு அபார மருத்துவ சக்தி உண்டு. வெளியே கடைகளில் கிடைத்தாலும் கோவிலுக்கு உள்ளிருந்து மண் எடுப்பது சாலச் சிறந்தது. கடைகளில் நாமக்கட்டி வாங்கினோம். இதுவும் வீட்டில் வைத்துக்கொள்ளலாம். சங்கர நாராயணன் சந்நிதிக்கு வந்தால் மெய்சிலிர்க்கிறது .... வலப்பகுதியில் ஹரியும் இடப்பக்கத்தில் சிவனுமாக காண இரண்டு கண்கள் போதுமா என்ன? விலைமதிப்பில்லாத ஒரு தரிசனம் என்று தான் கூற வேண்டும். இதை தவிர சங்கரலிங்கம் சந்நிதியும் உண்டு. இந்த கோவிலின் வாசலில் கிடைக்கும் படங்களிலே கோமதி அம்மனும் சிவனும் (லிங்கம் அல்லாத தோற்றத்தில்) இருப்பது எத்தனை அழகு தெரியுமா?
அன்னை உமா தேவி, சைவ, வைணவ வேறுபாடு எவ்வாறு நீங்கும் என்று சிவபெருமானிடம் கேட்டாள். அதற்கு சுவாமி பூலோகத்தில் புன்னை வனத்தில் நீ தவம் செய்தால் உனக்கு உரிய விடை கிடைக்கும் என்றார். உமா தேவி புன்னை வனத்திற்கு வந்து மக்கள் நலனுக்காகத் தவம் செய்தாள். . சுவாமி ஆடிமாதம் உத்ராட நட்சத்திரத்தில் பௌர்ணமி நாளில் காட்சி கொடுத்து அம்மைக்கு அரியும், அரனும் ஒன்றே என்ற அருளி சங்கரநாராயணராகப் பொலிந்து நின்றார். சங்கரநாராயணரின் திருக்கோலத்தை கண்ட அம்மை அரியும், அரனும் ஒன்றே என்பதை உணர்ந்து இக்கோலத்தினை மக்களும் கண்டு தரிசிக்க வேண்டும் என வேண்ட, சங்கரநாராயணர் இங்கு என்றென்றும்இக்கோலத்தோடு திகழ்வேன் என்று வரம் கொடுத்தார். அந்த நாளேஆடித்தபசு நாளாகும்.
ஆடி தபசு விழா - மண்டகப்படி 3ம் நாள் >> ஐப்பசி திருக்கல்யாணம் >> சித்திரை பிரம்மோற்சவம் ஆகியவை முக்கிய திருவிழாக்கள். பதினொன்றாம் நூற்றாண்டில் உக்கிரன்கோட்டையை ஆண்டு வந்தான் உக்கிரபாண்டியன் என்னும் மன்னன். அருள்மிகு சோமசுந்தரரை பார்க்க மதுரைக்குச் செல்வது வழக்கம் .ஒரு முறை மன்னன் மதுரைக்கு சென்று கொண்டிருந்தான். யானை ஒரு பள்ளத்தில் வீழ்ந்து விட்டது. புன்னைக்காட்டின் காவல்காரன் மன்னனிடம் வந்தான். "மன்னா, காட்டின் நடுவில் ஒரு புற்று இருந்தது. அது தரைமட்டமாக ஆக்கப்பட்ட போது ஒரு நாகம் தென்பட்டது. இது கடவுளின் சொத்து என்று எண்ணுகிறேன். அந்த நாகத்துக்கு அப்படியொரு சக்தி உண்டு. "
இதைக்கேட்டவுடன் மன்னன் அவ்விடத்திற்கு விரைந்தான் - என்ன அதிசயம் - அங்கே புற்றுக்கு பக்கத்தில் ஒரு சிவ லிங்கம் தென்பட்டது. நாகச்சுனையில் நீராடி விட்டு மன்னன் பூஜை புனஸ்காரங்களைச் செய்தான். வரலாறு படி இந்த மன்னன் தான் கோவிலைக்கட்டினான் - மண்டபம், கோபுரம், சுற்றுச்சுவர்கள் உட்பட. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் ராமபாண்டியன் எனும் மன்னன் தான் முகப்பு மண்டபத்தையும் ராஜ கோபுரத்தையும் கட்டினது. இரவு ஒன்பதரை வரை கோவில் திறந்திருக்கிறது. காலை ஐந்து மணி முதல் மதியம் பன்னிரண்டு வரை நடை திறந்திருக்கும். கோவிலுக்கு உள்ளே இருக்கும் நாகச்சுனையில் நீராடலாம் போல - நிச்சயமாகத் தெரியாது. பதுமன் மற்றும் சங்கன் எனும் நகராஜாக்கள் தான் இந்தச் சுனையைத் தோண்டினார்கள் என்று வரலாறு கூறுகிறது.
மிகப்பெரிய நந்தி. தாராளமாக விண்ணப்பம் வைக்கலாம். ராஜ கோபுரம் 125 அடி உயரம். கோபுரத்தில் ஒன்பது படிகள். கோவிலின் நுழைவு கட்டணங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப நியாயமானவை. மற்ற இடங்கள் மாதிரி பக்தர்களின் பரிசுகளை பதம் பார்க்கும் வேலை எல்லாம் இங்கே கிடையாது. சக்தி வாய்ந்த , சிறப்பான, தூய்மையான, கோவில் சங்கரன் கோவில் எனலாம். சூரியனின் ரேகைகள் சிவலிங்கத்தின் மேல் படர்வது இன்றும் நாம் காணலாம். களக்காடு பெரியகோவிலில் கூட இந்த அதிசயத்தை காணலாம். தை மாதாந்திர வெள்ளிக்கிழமையன்று தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது. ஆடித்தவசு திருவிழா 9ம் நாளன்று சுவாமி, அம்பாள் திருத்தேரோட்டமும் சித்திரை பிரமோற்சவ திருவிழாவின் 9ம் நாளன்று அம்பாள் திருத்தேரோட்டமும் நடைபெறும்.
நாங்கள் சென்ற அன்று என்ன விழாவென்று தெளிவாகத் தெரியவில்லை. நிறையக்கூட்டமாக இருந்தது தெருவில். தேர் இழுக்கப் பட்டது. சிறு பிள்ளைகள் முகத்தில் குங்குமம் பூசிக்கொள்கிறார்கள். தெருவில் நடனம் வேறு - தேங்காய் உடைக்க பட்டது . நெல்லைக்கு சென்றால் காரா சேவ் உட்கொள்ளாமல் வர முடியுமா? அதுவும் நன்னாரி சர்பத்தும் .... நெல்லையின் ஸ்பெஷாலிட்டி ஆயிற்றே. வழியில் பசியாற இது வழி வகுத்தது. சங்கரன் கோவில் பயணம் மறக்க முடியாதது. சென்று விட்டு வந்த பிறகு தாக்கம் வெகு நாள் இருந்தது. மறுபடியும் எப்பொழுது கோமதி அம்மனையும் சங்கர நாராயணனையும் தரிசினம் பண்ண போகிறோம் என்று மனம் விழைகிறது. கோமதி என்கிற பெயரும் சங்கர நாராயணன் என்கிற பெயரும் எவ்வளவு அருமையான பெயர்கள். இதை விட்டு விட்டு கரண், ரோஹன், ரீயா, ரீஷா என்று குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் கொடூரம் தான் மனதை வருத்தம் அடையச்செய்கிறது. ஒரு முறை சங்கரன் கோவில் சென்று விட்டு வாருங்கள். உங்கள் வாழ்வில் மாற்றத்தை நீங்கள் நிச்சயம் அனுபவிப்பீர்கள். இது நிச்சயம். கோமதி அம்மனே துணை.. சங்கரநாராயண ச்வாமியே துணை.. கட்டுரை எழுதியவர் - க. வெங்கடேஷ்.
Comments
Post a Comment